காதல் பித்து


அவனை காண்பதற்காக அப்பாவிடம்
" நான் தோழிகளுடன் பேருந்தில் செல்கிறேன்" என்று சொல்கிறாய்

அவனை அருகில் சென்று பார்க்க
வெட்கமோ பயமோ கூச்சமோ
அங்கங்கே தூரமாய் நின்று ரசிக்கிறாய்

அவனிடம் பேச தயாராகி,
பேச நினைப்பதை மனப்பாடம் செய்து, 
தோழிகளிடம் ஒப்புவித்து, ஆசி பெற்று
தயங்கி தயங்கி அவன் அருகே சென்று
கை கால் பட படத்து, வியர்வையில் குளித்து
அப்படியே ஏதும் சொல்லாமல் திரும்பி வருகிறாய்

அவள் பேருந்தில் உன்னை மட்டுமே பார்க்கிறாள் என்று தெரிந்தும்
எங்கேயோ பார்க்கிறாய்
அவள் கைகடிகாரத்தில் மணி பார்க்கும் பொழுது
கண் மறைக்கும் முடியை கையால் நகர்த்தும் பொழுது 
அந்த நொடிப்பொழுது அவளை பார்க்கிறாய்


தூரத்தில் இரு கண்கள் இமை மூடாமல்
உன்னை பார்ப்பது அறிந்தும்
வெட்கமோ கூச்சமோ பயமோ
பதில் பார்வை பார்க்கவில்லை நீ

அவள் அருகே வருவது அறிந்தும்
பேச நினைப்பது தெரிந்தும்
கண்டுகொள்ளாமல் நிற்கிறாய் 
அவள் தயங்கி போய்விட்டாள்
நீயும் அவளிடம் போய் பேச தயங்கிவிட்டாய் 

உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்...
நீங்கள் காதல் பித்தின் ஆரம்ப நிலையில் இருக்கிறீர்கள்
அதற்கான அறிகுறி இது 

        --------


பேசிவிட்டீர்கள் சொல்லிவிட்டீர்கள் 
மகிழ்விக்கு மேல் மகிழ்வு

சந்திக்கிறார்கள் தனியே 
பேசுகிறீர்கள் விழி வழியே

தனியே சிரிக்கிறீர்கள்
எங்கோ பார்த்து எதையோ நினைக்கிறீர்கள்

விழித்த பின்னும் கனவில் வாழ்கிறீர்கள்
அழைத்த பின்னும் திரும்ப மாட்டீர்கள்

உங்களுக்குள் பல கொடுக்கல் வாங்கள்
அது முத்தமோ, பரிசோ, எதுவோ 


செல்ல கோவம் செல்ல சண்டை
தனிமை பிடிக்கும் சில சமயங்களில் பிடிக்காது

ஒரு விஷயம் சொல்லவா?
காதல் பித்து பிடித்து விட்டது உங்களுக்கு
ஜாக்கிரதை 

       --------

நீயோ தக்காளி வாங்க கடைக்கு போய்
கத்தரிக்காய் வாங்கி வருகிறாய் 
அவளோ சாம்பாரை மீன் குழம்பு என்கிறாள்

வீடு திரும்பினாள்
கைபேசியே கதி என்று ஆகிவிட்டீர்கள்

விடுமுறை நாட்களில் சாப்பிட தோணாது
பலமுறை யோசித்து தான் தண்ணீர் குடிக்கவே தோணும்


நிலா தூங்கினாலும் 
நீங்கள் தூங்குவது இல்லை
சூரியனை எழுப்பி விடுகிறீர்கள்
சூடான தேநீருடன்


சில சமயம் காது கேட்பதில்லை
சில சமயம் கண்கள் தெரிவதில்லை 

பலமுறை பொய் கூறுகிறீர்கள் 
பலமுறை உண்மையை மறைக்கிரீர்கள்


நிகழ்காலத்திலே இருந்துகொண்டு
கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும் வாழ்கிறீர்கள்

ஆரம்ப நிலையிலேயே பெற்றோருக்கு தெரிந்திருக்கும்
அது புரியாமல் அவர்களிடம் மறைக்க பார்க்கிறீர்கள்


நீ உன் தோழிகளிடம் கூறுவாய்
அவனோ அவன் தோழர்களிடம் கூறுவான்
ஆனால், இருவரும் வீட்டில் சொல்வதில்லை

ஐயோ... வீட்டில் மாட்டிவிட்டீர்களா?
கவலை வேண்டாம்
எல்லாம் நன்மைக்கே

ஒன்று சொல்லவா?
காதல் பித்து முத்திவிட்டது உங்களுக்கு
திருமணத்தில் சந்திப்போம் 


               ~ ஜெய் கபி 

Comments