கபியின் பார்வையில் "தாயும் கடவுளும்"
எனக்கு உலகம், மனிதம் எல்லாம் புரிய வந்த வயதிலிருந்தே கடவுள் என்ற ஒருவர் அல்லது பல பேர் கொண்ட குழுவாக கடவுள்கள் என்று யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் அப்படி... இப்படி... என்றெல்லாம் கதை சொல்லியிருக்கிறார்கள். அது என் காதுகளில் கூட கேட்காமல் இல்லை. அதனால் அப்படிப்பட்ட விஷயங்கள் மறக்கவும் இல்லை.
இப்போது வளர்ந்து விட்டேன் என்று நினைக்கிறேன். இப்போதைய புரிதல் எனக்கு என்னவாக இருக்கிறது என்றால், "கடவுள் என்பது வெறும் பெயர்ச்சொல்."
எவ்வாறு கடவுளுக்கு சாமி, தெய்வம் என்றெல்லாம் பெயர்கள் இருக்கின்றதோ, அவ்வாறே இங்குள்ள கடவுள்களுக்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கடவுள்களுக்கு இங்கு பல பெயர்கள். கடவுள்களும் பல.
யார் யாருக்கெல்லாம் கடவுள் என்ற பெயர்ச்சொல் பொருந்தக்கூடியது என்று தெரியாததால், சில சமயங்களில் நேரில் பார்த்த கடவுளைக்கூட " கடவுள் மாதிரி" என்ற வார்த்தையை முன்கூறியே பேசி வருகிறோம்.
கடவுள் என்பவர் எப்படிப்பட்டவர் என்ற கோட்பாடுகளுக்கு பொருந்துவோர் இங்கு ஏராளம். அப்படி அந்த குணாதிசியங்களுக்கு பொருந்தக்கூடிய எனக்கு புரிந்த கடவுளுக்கு இருக்கும் இன்னொரு பெயர் தான் "தாய்". தாய்க்கும் பல பெயர்கள் இருக்கின்றன.
"கடவுள் அன்பின் வடிவானவர். அன்பே கடவுள்." என்றெல்லாம் கூற கேட்டிருப்போம். அப்படி நான் நேரில் பார்த்த அன்பின் வடிவமும், அன்பை எனக்கு கொடுத்து, அதை பிறருக்கு பகிரவும் கற்றுக்கொடுத்தவள் தாய்.
அம்மா என்றால் அம்மா தான். அதில் உங்க அம்மா, எங்க அம்மா, அவங்க அம்மா, இவங்க அம்மா என்றெல்லாம் இல்லை. அம்மா என்றால் அம்மா தான். இந்த புரிதல் எனக்கு நா. முத்துகுமார் எழுதிய "அணிலாடும் முன்றில்" வாசிக்கும்போது வந்தது. உண்மை தானே.
கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று நிறைய பேர் சொல்லி கேட்டிருப்போம். அதுவும் தாய்க்கு பொருந்தும். உலகில் எங்கு பார்த்தாலும் தாய் தெரியாமல் இல்லை. அப்படி தெரியவில்லை என்றால் நீங்கள் தூணிர்க்கு பின்புறம் பார்த்திருப்பீர்கள் அல்லது நீங்கள் பார்த்தது தூணாக இருந்திருக்காது.
கடவுள் என்றால் மனிதர்கள் போல் அல்லாமல் கூடுதல் சக்தி படைத்தவர் என்ற கதையும் கேட்டிருப்போம். தாயிடம் இல்லாத சக்தியா? உதாரணம் தருகிறேன். மனிதர்களால் தாங்கக்கூடிய அதிகபட்ச வலியின் அளவு 45 டெல். ஆனால், பிரசவத்தின் போது 57 டெல் அளவு வலியை பொறுத்துக்கொள்கிறாள். இது ஒரே நேரத்தில் உடலில் 20 எலும்புகள் உடையும்போது ஏற்படும் வலிக்கு சமம். அப்படி ஆகியும் கூட அடுத்த குழந்தைக்கும் தயாராகிறாள். இந்த அதிசய சக்தி பெற்றிருக்கிறாள் தாய்.
எனக்கு தெரிந்து கடவுள் என்று சிலர் கூறி வரும் கடவுளை நான் கண்டதும் இல்லை, அவர் பேசி கேட்டதும் இல்லை.
சிலர் கூற கேட்டிருக்கிறேன், தாயை நடமாடும் தெய்வம் என்பார்கள். அப்படி என்றால் அவர்கள் நினைக்கும் தெய்வம் நடக்காத ஒன்றா? பறக்குமா? மிதக்குமா? தெய்வம் நடக்கும் என்றால் தாயை நடமாடும் தெய்வம் என்று ஏன் கூற வேண்டும்? இதை கேட்கும்போது எனக்கு உவமை படுத்தி கூறுவது போல் தெரிகிறது. நடமாடும் பழக்கடை, நடமாடும் பஞ்சர் கடை, நடமாடும் உணவகம் மாதிரி வசதி குறைந்த, தரம் குறைந்த, வேறு ஒன்று போல் அமைந்த ஒருவளா தாய்? அதென்ன நடமாடும் தெய்வம்?
நான் முன்பு சொன்னது போலவே தாய் என்ற பெயர் மட்டும் கடவுள் என்ற பெயருக்கு உள்ள மாற்று பெயர் அல்ல. கடவுள் என்பதற்கான குணதிசியங்களுக்கு பொருந்தக்கூடிய நிறைய பெயர்கள் இங்கு இருக்கிறது.
அடுத்தடுத்து காண்போம்.
~ ஜெய் கபி
Comments
Post a Comment