மழைக்கு என்மேல் எவ்வளவு பிரியம்..!
காலை போல இருந்தது மதிய வேளை. குளிர்ந்த காற்று, ஜன்னலின் வழியே என்னைப் பார்த்துவிட்டுச் சென்றது மின்னல் கீற்று. நான் இங்கு தான் இருக்கிறேன் என்று மழையிடம் போய் சொல்லியிருக்கும் போல.
சற்று நேரம் கழித்து இடி என்னுடன் உரையாடியது சில வினாடி. நான் இங்கிருக்கும் தகவலை மின்னல் வந்து சொன்னதும், என்னைக் காண ஆவலாய் இருக்கிறது மழை, என்று இடி என்னிடம் சொன்னது.
பார்த்து பேசி பல காலம் ஆகிவிட்டதால் எனக்கும் மழையைக் காண ஆவலோ ஆவல்.
காற்றோடு கலந்து லேசான சாரலாய் என்னைத் தேடி அலைந்தது. மீண்டும் மின்னல் வந்தது. இம்முறை தேடி அலையும் மழைக்கு, நான் இருக்கும் இடத்தை காட்டித்தர வந்தது. மழையும் என்னைப் பார்த்து விட்டது. லேசான சாரல் பரும் தூரலாய் மாறியது என்னைக் கண்டுபிடித்த பூரிப்பில்.
மௌனமாய் சத்தம் போட்டு ஆனந்தமாய் பேசிக்கொண்டோம். கை குலுக்கவில்லை, கட்டியணைக்கவில்லை. காரணம், நான் வகுப்பறைக்குள் இருந்தேன். அதனால் அப்போதே முடிவு செய்துவிட்டேன் மதியம் வீட்டிற்கு சென்று விடலாம் என்று. கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். வகுப்பு முடியும் மணி ஒலிக்க இன்னும் பத்து நிமிடங்கள் தான் உள்ளது. மழையின் கூறினேன்,
"பத்தே பத்து நிமிடங்கள் மட்டும் பொறுத்துக் கொள். வந்து விடுகிறேன்." என்று.
"பபபத்த்த்துதுது நிமிடங்களா?" என்று பதைத்தது.
மெதுவாக ஜன்னலின் வழியே கையை நீட்டினேன். அடடா..! என் கை விரலில் பட்ட குளிர்ச்சி என் கால் விரலில் சென்று முடிந்தது.
மணி ஒலித்தது. பையை தோளில் மாட்டி குதூகலமாய் வெளியே ஓடினேன். மழையும் குதூகலத்தில் சற்று வேகமானது. முதல் தளத்திலிருந்து படியில் வேகமாக இறங்கி கீழே வந்தேன்.
ஆச்சர்யம் என்னவென்றால் யாரும் மழையில் வெளியே வரவில்லை. ஆங்காங்கே ஒதுங்கி மழையை தீண்டாதவாறு நின்று கொண்டனர். இதனைக் கண்டதும் மழை சோகத்தோடு என்னைப் பார்த்து கண்ணீர் விட்டது.
"சரி அழாதே. நீ என்னைக் காணத் தானே வந்தாய். பிறகு அவர்கள் செய்யலுக்கு ஏன் கலங்குகிராய்?" என்றதும் சோகப் பார்வை நீங்கி மகிழ்ந்தது.
"அவர்கள் அப்படித்தான். உன் அன்பிற்காக ஏங்குவார்கள், ஆனால், நீ வந்தால் உன்னை தாங்கிக் கொள்ளமாட்டார்கள்." என்றேன். சிரித்தது.
நான் யாரையும் கருதாமல் மழையோடு மௌனமாய் உரையாடிக் கொண்டே கல்லூரி வளாகத்தை தாண்டி வந்தேன். என் பைக்கை எடுத்துக் கொண்டு மெதுவாக மழையோடு பேசிக் கொண்டே சென்றேன். பேசிக் கொண்டிருக்கும்போதே மழை என்னை இறுக்கமாய் கட்டி அணைத்தது. நானும் உடையும் அதன் அன்பில் ஊறிவிட்டோம். திடீரென்று என்னை நிற்க சொன்னது.
"ஏன்?" என்றேன்.
"உன் ஃபோனை நனையாதவாறு பத்திரப் படுத்திக்கொள். நான் சீக்கிரம் உன்னை விட்டு போவதாக இல்லை." என்றது.
நானும் என் ஃபோனை எடுத்து நனையாதபடி வைத்துவிட்டு பைக்கை ஓட்ட ஆரம்பித்தேன்.
வரும் வழியெல்லாம் மழை என்னை பேச விடாமல் பேசிக்கொண்டேயிருந்தது. சில சமயம் பாடியும் காட்டியது. எனக்காக எழுதி வைத்த கவிதையும் வாசித்துக் காட்டியது.
சட்டென போய்விட்டது. "எங்கே போனாய் என்னை விட்டு?" நானும் மெதுவாக சென்று கொண்டே தேடிக்கொண்டு போகிறேன், காணவில்லையே.
செல்லும் வழியில் மழைத் தூறிய தடம் கூட இல்லை. அது போன வேகத்து சுவடு மட்டும் லேசான சாரலாய் இருந்தது.
"எங்கு சென்றிருக்கும்?" கடைசியாக கவிதை சொல்லிக்கொண்டிருந்தது. சோகமானேன்.
போக போக சாலையெல்லம் ஈரமற்று இருந்தது. "ஆக, மழை என்னைக் கடந்தும் செல்லவில்லை. வேறு எங்கு சென்றிருக்கும்?"
பசிக்கிறதென்று ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மனமெல்லாம் மழை தான். சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் நினைவெல்லாம் மழையைத் தேடியே இருந்தது. சட்டென மின்னலும் பட்டென இடியும்,
"நீ இங்குதான் இருக்கிறாயா? உன்னை தொலைத்துவிட்டோம் என நினைத்து மழை அங்கே அழுது கொண்டிருக்கிறது." என்று கூறி, "இரு நாங்கள் கூட்டிக் கொண்டு வருகிறோம்" என்று சொல்லி சென்றன.
நானும் சாப்பிட்டு முடித்து, பைக்கில் ஏறி தயாராய் இருந்தேன். மெதுவாக சென்று கொண்டிருந்தேன். வந்துவிட்டது. இடி, மின்னல், காற்றோடு வந்தது. வந்தக் கணம் என்னை கட்டிக்கொண்டது விடவே இல்லை. எதிரில் வரும் வாகனங்கள் தெரியவில்லை. முழுவதுமாய் முத்தமிட்டு சத்தமிட்டுக் கொஞ்சியது.
"சொல்லாமல் சென்றாயே. ஏன்?" என்று நானும் கேட்கவில்லை.
"நான் எங்கு பேனேன் தெரியுமா?" என்று மழையும் என்னிடம் கேட்கவில்லை. அந்த தேவையும் எங்களுக்கில்லை.
என் வேகம் முப்பதைத் தாண்டவில்லை. கதைத்துக் கொண்டேயிருந்தோம்.
"சரி... நாளையும் என்னைக் காண வருவாயா?" என்று ஆவலாய் கேட்டேன்.
"ஆமாம். எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் உன்னைக் காண வருவேன்." என்றது மகிழ்வாய்.
வீடும் வந்துவிட்டது. வீடு வரை வந்தது, போகும்போது என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு சென்றது. அது போகும்வரை பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி துளி என்னைக் கட்டித் தழுவும் வரை.
~ ஜெய் கபி
Comments
Post a Comment