கபியின் பார்வையில் "கடல் அலை"





கடல் அலை. இதை வாசிக்க எவ்வளவு அழகோ அதை விட அழகு நேரில் சென்று பார்ப்பது தான்.

 ஜில்லென்ற காற்று, கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் மட்டுமே. அலையின் சத்தம், கரையில் நான் வெறும் காலுடன். இது போதுமே... கவலை, கஷ்டம், சோகம் எல்லாமே போகும் என்னை விட்டு தூரமாய். கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவலை கண்படுவதில்லை. 

 கடல் அலையை கான சென்றால் போதும், கால் மீது காதல் கொண்டு ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கும். அலைக்கு நல்லவர் கால் தீயவர் கால் என பிரித்து பார்க்க தெரியாது.

 கண்கள் முழுதும் கஷ்டம். கண்ணீர் மல்க கடற்கரையில் நின்று கவலையை நினைத்து கதறி அழ வேண்டாம். நின்றால் போதும். உங்கள் கவலையை அறிந்து கடல் அலை சத்தமிட்டு அழுது ஆறுதல் சொல்ல நம்மை தொடுமே, அவ்வளவு தான்...! எல்லாம் மறந்து, தொலைந்து அந்த ஒரு வினாடி விண்வெளிக்கே சென்று திரும்பிய மன மகிழ்வு. உடலெங்கும் சிலிர்ப்பு, நம்மை அறியாமலே கவலை மறந்து முகத்தில் சிரிப்பு. 

 இவ்வுலகில் கடல் அலையை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. அதன் உண்மையான உயரம் அறிந்தவரும் யாரும் இல்லை. கடல் அலையை விட தாழ்ந்தவர்களும் யாரும் இல்லை. இவ்வுலகில் எவ்வளவு தாழ்ந்தவர் ஆனாலும் அவர்களின் கால் தொடுமே கடல் அலை. 

 பூமியில் அனைத்து உயிர்களையும் சரி சமமாய் மதிக்கும் பலவற்றில் கடல் அலையும் ஒன்று. 

 கடலில் எதுவாக இருந்தாலும், இறந்தாலும் அதை கரையில் கொண்டு சேர்க்கும். சில சமயம் கரையில் இருப்பதையும் கடலுள் கொண்டு சேர்க்கும். அது எதுவாக இருந்தாலும், உயிரோடிருந்தாலும். 

 இங்கோ பல்வேறுபட்ட இயக்கங்கள், இயந்திரங்கள் இருக்கலாம்... இயங்கலாம்... இயக்கலாம்... அது நீடிக்குமா? நிற்க்குமோ? ஆனால், கடல் அலையோ இடைவேளையில்லாமல் இயங்கிக்கொண்டே இருக்கும். பழுதடைவதும் இல்லை, பாழாவதும் இல்லை.

இங்கு நடக்கும் குற்றங்கள் கொடுமைகளை கண்டு குரல் கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் அதை மதிப்பது இல்லை. 

 கடல் அலையும் அழுவதை நிறுத்திவிட்டு ஆத்திரத்தைக் காட்டும். பொறுமையை பொறுத்து பொங்கி எழும். போராட்டத்தை நிறுத்தி விட்டு போர் புரியும். 

 முன்பு சொன்னது போலவே கடல் அலைக்கு நல்லவர் தீயவர் என்று தெரியாது என்பதால் போரில் இழப்பு யாருக்கும் நிகழலாம்.

 கரையில் நின்று கடல் அலையின் அழகை மட்டும் பார்த்து விட்டு சென்று விடாதீர்கள். இன்னும் ஆழ்ந்து பாருங்கள். அதன் அழுகையை கேளுங்கள். அமைதியாய் அலையிடம் பேசுங்கள். அதுவும் கூறும் உங்களிடம் ஆயிரம் கஷ்டங்களை, கவலைகளை.

 

                         ~ ஜெய் கபி

Comments

Post a Comment

Popular Posts