ஈக்களோடு ஈயாய்
இனிப்புகளை மூடிவைத்திருக்கும் கண்ணாடிக்குள்
எப்படியோ சென்ற அந்த ஒரு ஈயாய் மாற ஆசை
ஆனால் என்ன செய்ய?..
சிறிய காலியிடத்தைக் கூட மொய்க்க
பல ஈக்கள் உள்ளதே...
அசிங்கத்தில் மொய்க்கும் ஈக்களைப் பார்த்து
சிரித்து சிரித்து
வேறொரு இடம் போய் மொய்த்தேன்
பாவம்...
நான் போன இடமும் அசிங்கம் என்று
இங்கு பல ஈக்கள் சிரிக்கின்றன....
சிந்திய பழரசத்தில் மொய்க்கும்
ஈயாய் இருக்க நினைத்தேன் உழைத்தேன்
என் நேரம்....
துப்பிய எச்சிலில் மொய்க்கிறேன்...
நான் சாக்கடைக்கருகில் வாழும் ஈயாய் இருந்துகொண்டு
என் சந்ததியை பூக்கடைக்கருகில் வாழும் ஈக்களாய்
இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்....
சவத்தையும் கண்ணீரையும் மொய்க்கும்
ஈக்களோடு ஈயாய் இருக்க விருப்பமில்லை
பாவம்...
என்னையும் சவமாக்கி விட்டனர்
ஈக்களோடு ஈயாய்....
~ ஜெய் கபி
Comments
Post a Comment