சிறுகதை


நிலாவுக்கும் நிலவனுக்கும்
நின்று போயிருந்தது உரையாடல்
அடுத்தபடியாக
நிலவன் கதை கேட்டான்

"கதையா?
எந்தக்கதை?

வானம் வந்தக் கதை
பூமி வந்தக் கதை
எது வேணும் உனக்கு?"

"கேட்டு சலித்து விட்டது
ருசித்துப் புளித்து விட்டது
வேறு கதை இல்லையா?"

"உலகில் உயிர் வந்தக் கதை
உன் பெயர் வந்தக் கதை
எதை சொல்ல உனக்கு?"

"என் பெயர்
வந்தக் கதையா?"

"ஆம்.
சொல்லவா?"

சத்தியம் வாங்கிக்கொண்டு
சத்தமின்றி சொல்ல தொடங்கியது

"நானே பொறாமை படும்
பேரழகு உன் அம்மாவுக்கும்
ஊரே போற்றும் உத்தமன்
உன் அப்பாவுக்கும்

நிறைந்த பௌர்ணமியில்
நீ பிறந்தாய்

உன் அம்மாவும் அப்பாவும்
காதலிக்கும் முன்
இருவரும்
என்னைக் காதலித்து விட்டனர்

இருவரின் முன்னாள் காதல்
நான் என்பதால்
என் பெயரை 
உனக்கு வைத்து
தினம் தினம்
அழைத்து அழகு பார்க்கிறார்கள்"

"ஆனால்,
என் பெயர்
நிலா இல்லையே..."

"அவர்கள் ஆசைப்பட்டது
நிலா தான்
ஆனால்,
நிலவனாக நீ கிடைத்தாய்!"

நிலா
குட் நைட் சொல்லி
மேகத்திற்குள் மறைந்தது

நிலவனும்
பாட்டி மடியில்
அப்படியே தூங்கிவிட்டான். 

                      ~ ஜெய் கபி 

Comments