ஒரு தலை போதாது..!


தினமும் வந்தாலும்
பார்த்துச் சலிக்காத
நிலா போல
உன்னைப் பார்க்க
ஏங்கும் என் கண்கள்
உன்னைப் பார்த்ததும்
படம் பிடிக்கும் - நீ
என்னைப் பார்க்கவே
அடம் பிடிக்கும் - ஏனோ
மனம் படபடக்கும்

நீ என் நிலவானதால்
உனைக் காணா நாள்தவிர
தேய்பிறை அமாவாசை எனக்கில்லை!

பார்க்க தோன்றும் - ஆனால்
பார்த்தால் பதறும்
பேசத் தோன்றும் - ஆனால்
வார்த்தை உளறும்...

என்னைச் சுற்றி
என்ன நடந்தாலும்
என்னை மறந்து
உன்னை நினைத்து
தன்னாலே சிரித்துக்
கொண்டிருக்கிறேன்.

வாழ்கையில்
பல இலக்குகளை
அடைய நினைத்த
என் இப்போதைய
அன்றாட இலக்கு
உன் முகம் பார்ப்பது
உன் குரல் கேட்பது....

சில சமயம்
விண்வெளியில் இருக்கிறேன்
விண்மீன்கள் பிடிக்கிறேன்
சூரியன் நீல நிறமாகிறது
மேகங்களிடம் கதை பேசுகிறேன்...

இந்த உலகம்
இந்த உணர்வு
பிடித்துவிட்டது எனக்கு

இதற்குப் பெயர்
ஒருதலைக் காதல் என்றால்
எனக்கு
ஒரு தலை போதாது..!

            ~ ஜெய் கபி 

Comments