பாரதி இன்றும் இருக்கிறான்

பாரதீயே...
நீ விட்டுச் சென்ற
தீப்பொறி இன்று
வளர்ந்து பெரும்
தீக்காடாக மாறியிருக்கிறது
உன்போலவே
இங்கு பல
பாரதிகள் தமிழை
தலைநிமிர வைத்துக்
கொண்டிருக்கிறார்கள் 
நீ இங்கு இல்லாமல் 
இருக்கலாம் 
ஆனால் உன்
தீ இங்கு இல்லாமல்
இல்லை 

என் போன்ற
இளம் கவி
இன்பமாய்
கவி இயற்ற 
புதுக்கவி பாடி
புவியெங்கும் 
புகழ்பெற 
அடிக்கல் நாட்டி
படிகள் ஏறி
பா பாட 
பா மூலம் 
தீத் தெறிக்கக்
கற்றுக் கொடுத்த
மகாகவி நீ 

இன்றும்
காதலியை
கண்ணம்மாவென
உருகும் ஒருவனில்
இன்றும்
ரௌத்திரமாய்
அநியாயங்களை 
அறுத்திடும் ஒருவனில்
இன்றும்
குழந்தைகளை
குழந்தை கண்
கொண்டு காணும் ஒருவனில்
இன்றும்
அடிமை வாழ்வை
அகற்றும் ஒருவனில்
இன்றும்
அனைவரும் 
சமமென கருதிடும் ஒருவனில்
இன்றும்
பெண்கள் பேதையில்லை
என்றும்
பெண்கள் பேசவேண்டும் 
என்றும்
பெண்களைப் பேசவேண்டும்
என்றும் என்றுமே
உரைப்பவன் ஒருவனில்
இருப்பது நீ
உன் மிசசத் தீ 

மண்ணிற்கொரு கேடு 
மக்களுக்கொரு கேடு 
எனும்போது 
கேள்வியின் விரல்களால்
வீணை மீட்டும் 
இரத்த மையினால்
தீமுனையினால்
எழுதித் தீட்டும்
ஒவ்வொருவனுக்குள்ளும் 
பாரதி 
இன்றும் இருக்கிறான்








Comments