வேறென்ன வேண்டும்?


காற்று முத்தமிடும்போது நகரும் 
உன் கூந்தல் போதாதா என்னை சாய்க்க?

 இரு மலைகளுக்கு நடுவே
அந்திவானம் சிவந்தது போல் 
உன் நெற்றியில் ஒற்றியிருக்கும்  
குங்குமம் போதாதா என்னை நகராமல் நிறுத்த?

தேவதையே உன்னை வர்ணிக்க 
தேவையற்றவை எல்லாம் கூறியபோது
குட்டி கோபமாய் தூக்கிய 
புருவம் போதாதா என்னை அருவமாக்க?

விண்மீன்கள் எல்லாம் திரண்டு வந்து
உன்னை திருடி என்றதே. "எதை திருடினேன்?" 
என்று கேட்டதற்கு, "எங்களுள் இரண்டை திருடி
வைத்திருக்கிறாயே" என்று காட்டிய 
உன் கண்கள் போதாதா என்னையும் திருடி விட?

பட்டின் மென்மையை அளவிடும்
அளவுகோலாய் இருக்கும் உன் 
கன்னம் போதாதா என் கதை முடிக்க?

சூரியன் கடலை முத்தமிட்டு விடைபெறும்போது 
கடல் வெட்கத்தில் சிவந்து விடுமே,
அதுபோல் சிவந்திருக்கும் 
உன் இதழ்கள் போதாதா
என் இதயம் படபடக்க?

பூக்களே பொறாமை கொண்டு வாடிவிடும் 
உன் புன்னகை போதாதா
என்னை புதைத்து பூ வைக்க?

வெண்ணிலவே வானம் விட்டு இறங்கி
உன்னுடன் வாதம் செய்து " இனி இரவில்
வெளியே வராதே" என்று கூற காரணமாய் அமைந்த 
உன் முகம் போதாதா என்னை முடமாக்க?

வேறென்ன வேண்டும்? 


              ~ ஜெய் கபி

Comments

  1. ஜெயிக்கிந்த்..... கவிதை நைஸ் da.... 💐😍😍❤

    ReplyDelete

Post a Comment

Popular Posts