ஒருமுனைக் காதல்
வந்துவிட்டாள்...ஆஹா! வந்துவிட்டாள்...
வலசை போகும் பறவை
வெகு காலம் கழித்து
வழி மாறாமல் வந்ததாம்
வேடந்தாங்கல்... அதுபோல
சில காலம் கழித்து
சிணுங்கும் வளையல் கையுடன்
என்னைத் தொட்டுத் தடவ
வந்துவிட்டாள்... அடடா! வந்துவிட்டாள்...
எனக்கு வலிக்குமே என்று
உன் வைரக் கையால்
என்னை மெதுவாக திருகி
என்முகம் பார்க்க என்
மூடி கழட்டினாயே - அடி
முல்லையே என்மேல் காட்டிய
அக்கறை சர்க்கரை போலவே...
உன் உள்ளம் போன்ற
வெண் தாளை எடுத்தாயே
என் கள்ள மனந்தான்
துள்ள துடிக்காதோ...
பூவிரலால் என் மேனியெங்கும்
தொட்டுத் தடவினாயே
வெட்கத்தில் என் நீல மை
நிறம் மாறி சிவக்குதம்மா...
முகம் மலர்ந்த புன்னகை
இன்ப வரிகள் இயற்றவா?
நான் அறிந்ததே..
என்னை வைத்து எனக்கே
காதல் கடிதமா? அடி கள்ளி...
எழுத எழுதவே புரிகிறது...
நான் அறிய மறந்தது
என் காதல் ஒருமுனையென்று...
ஆயினும், என் உதிரம்
என் காதலியின் காதலுக்காய்ச்
சிந்துவதில் பெருமையே...
~ ஜெய் கபி
Comments
Post a Comment