இனி நீயே கணினி


கணினி
இனி நீ
இன்றியமையாது என் உலகு..!

உன் சுட்டியைத் தட்டினால்
உலகமே எனதாகுமே

உன்னை அணுக
உன் உள்நுழைய வேண்டும்
அதற்கு
கடவுச்சொல் கேட்கிறாய்
கேட்டால்
"கடவுளாயினும்
கணினியிடம்
கடவுச்சொல் முக்கியம்" என்பாய்

வன்பொருளால்
உன் உருவம்
மென்பொருளோ
கண்படும் அருவம்

பிணையம் கொண்டு
இணையத்தில் - உன்
மணநிலை கேட்டேன்
துணையிலி என்றாய் அசைவூட்டமாய்..!
முடிவிலியாய் இருப்பேன் மகிழ்..

என் அருகலை இயக்க
உன் பகிரலை பகிர்ந்ததற்கு நன்றி
வா...
புலனத்தில் சலனிக்கலாம்
கீச்சகத்தில் கீச்சிடலாம்

யார் வலையிலும் சிக்காத நான்
உன் வலையில்
தானே வந்து சிக்கிக்கொண்டேன்..!
இணக்கியில் இருப்பு தீரும் வரை
இணக்கமாய் இருக்கிறேன்

என்னுடன் 
உரையாடவே
உரையாடல் பெட்டி கொண்டிருக்கிறாய்..!

உன்னை
நச்சு நிரல் தீண்டாதிருக்க
நற் தரவையும் சோதித்தே 
உள்ளிடுகிறேன்..!

உன்
உலாவியில்
உலாவுவதே - என்
அலாதிப் பிரியம்..!

இதை உன்
நினைவகத்தில்
நிரப்பிக்கொள்

நலமாய் உறங்கு
நாளை உள்நுழைகிறேன்..!

                       ~ ஜெய் கபி

Comments

Popular Posts