FAREWELL ஆத்திசூடி


அலைந்து திரிந்த அந்த நாட்கள்...
அழகழகான பல முகங்கள்...
ஆரம்பித்தது எந்த கணம் எனத் தெரியாத நம் நட்பு...
ஆழ்மனதின் அடியில் பதிந்த பெயர்கள்...
இறுதிவரைக்கும் இணைபிரியக்கூடாது என எண்ணத் தோன்றிய நிகழ்வுகள்...
இனிவரும் காலங்களுக்கான இனிய நினைவுகள்...
ஈக்களாய் மொய்த்த இடங்கள்...
ஈர நினைவுகளின் தடங்கள்...
உள்ளத்தில் உறவாகிப்போன மனங்கள்...
உலகெங்கும் சென்றாலும் மாறாத குணங்கள்...
ஊமையாகிப்போன சில காதல்கள்...
ஊதி ஊதி பெரிதாக்கிய சிறு மோதல்கள்...
எதிரும் புதிரும் என எதிரிகளாய்க் காணாத எண்ணங்கள்...
என்றைக்கும் அழியாதவாறு பூசிய வண்ணங்கள்...
ஏன் பிறந்தோம் என்ற காரணங்கள் கண்டறிந்த தருணங்கள்...
ஏமாற்றங்களின் காயங்கள்...
ஐய்யயோ! என பதறிய பல தேர்வு நேரங்கள்...
ஐந்தாறு பரோட்டாவோடு முடியாத சில பிறந்தநாள் மதியங்கள்...
ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்ட ஏதாவதொரு விஷயங்கள்...
ஒன்றாகிப்போன பலரின் தேர்வுத் தாள்கள்...
ஓயாமல் கதைத்துக்கொண்ட பல கதைகள்...
ஓரமாகவும் தூரமாகவும் நடந்த சாலைகள்...
ஔ-வில் தொடங்கும் வார்த்தைகள் போல
கொஞ்சமாய் இருக்கும் இந்த இறுதி நொடிகள்...
 

அத்தனையும் 
இன்னும் பலவும்...
முடிந்தது மூன்றாண்டு.!

காதலோ கல்லூரியோ
பிரியும்போது தரும் வலி
பல நாட்கள் ஆனாலும் 
பழுது பார்க்க முடியாது...

இரண்டின் வலிகளும்
இதயத்தில் பதிந்துவிடும்
இறக்கும்வரை ஆறாது; மாறாது...

                   ~ ஜெய் கபி

Comments

Post a Comment

Popular Posts