பேயும் பயந்து ஓடும்..!
கொடூர
பேயொன்று வந்தது
ஊருக்கு...
மக்கள் இப்போதெல்லாம்
மனிதர்களைப் பார்த்தே
மனம் பதைக்கிறார்களாம்...
நாயைப் பார்த்து
நடுங்குபவர்கள் கூட
பேயைப் பார்த்து
பயம் கொள்ளமாட்டார்களாம்...
ஊருக்குள் ஊடுருவிய பேய்
ஊரையே அலற வைக்க
உருமாறி வந்தது...
வாய் கிழிந்த
பேய் - ஆதலால்
சத்தத்தால் - ஊர்
மொத்தத்தையும்
கத்திக் கதற வைக்க
கட்டம் கட்டி
திட்டம் தீட்டியது...
கத்திய கத்தில்
பறவைகள் பதறின
நடப்பவை நடுங்கின
ஊர்வன உறைந்தன...
மனிதர்கள் மட்டும்
மதிப்பதாய் இல்லை...
மதிகெட்டப் பேய்
மனிதர்களைப் போய்
பயமுறுத்தப் பார்த்தது...
தூரத்தில் ஒரு கும்பல்.
அதில் சென்று பார்த்தது
அதிர்ந்து போய் நின்றது...
அது ஒரு கொலைகார கும்பல்.
கத்தியால் ஒருவனை
குத்தியவுடன் - அவன்
கத்திக் கதறிய சத்தம் கேட்டு
பதைத்தது பேய்...
அருகே ஒரு வீடு
அங்கும் ஏதோ சலசலப்பு
பேய் போய் பார்த்தது
திகைத்துப் போய் நின்றது...
மதுவை மூளையில்
வைத்திருக்கும் ஒருவன்
மனைவியை மூலையில்
வைத்து மிதிக்கிறான்...
அவள் அழுகை
சத்தம் கேட்டு
அசைவற்றது பேய்...
மனித மனம் கண்டு
பதறிய பேய்
கதறிக் கொண்டு
காட்டு பங்களாவிற்கு ஓடியது
கலங்கி போய் நின்றது...
சிறுமூளை மட்டுமே கொண்ட
சிலர்
சிறுமியை சீரழித்தனர்...
அழகிய தேவதை
அனாதையாய் இறந்து கிடந்தது...
இறக்கும் முன்
அவளின்
இறுதி மூச்சுச் சத்தம் கேட்டு
முடங்கியது பேய்...
மனிதர்களால்
மனிதர்களுக்கே
பாதுகாப்பற்ற ஊரில்
தனக்கேது பாதுகாப்பென
பேயும் பயந்து ஓடியது...
~ ஜெய் கபி
Comments
Post a Comment