வாழப் பழகு

துன்பத்தைத் தூக்கி தூர எறி
கடினம் தான்
கிட்ட எறிந்து விட்டு 
நீ தூரம் போ!

வாழ வாய்ப்பு வரும் 
அடிக்கடி வரும்
அதுதான் அந்த வாய்ப்பு 
என்று அறியப் பழகு

அதை நீ அறிந்தால்
இறகாகவும்
சிறுச்சருகாகவும்
மழைத் துளியாகவும்
சூரியச் சுடராகவும்
சுடர் கொல்லும் பனியாகவும்
மாற வாய்ப்புகள் வருமே

வானம் அழகாகும்
வானவில் அழகாகும்
ஆரம்பத்தில்...
போகப் போகப்
புழுக்கள் அழகாகும்
பூச்சிகள் அழகாகும்

வேட்டையாடும் விலங்கும்
விளையாடும் என்று
பார்த்துணர்

சுட்டெரிக்கும் வெயிலும் பழகு
நரம்பும் நடுங்கும் குளிரும் பழகு
நனைக்கும் மழையில்
உள்ளம் வரை ஊறப் பழகு
ஊறிய உன்னை 
நீயே அலசி பிழிந்து
காயப் போடு

நதியின் முதல் துளியாகவும்
மழையின் முதல் துளியாகவும்
கடலில் ஒரு துளியாகவும்
தெருக்குழாயில் ஒரு துளியாகவும்
சாக்கடையில் ஒரு துளியாகவும்
வாழ வாய்ப்புகள் வரும்
வாழ்...
அனுபவி...
அது உனக்கு 
வாழக் கற்றுத் தரும்

ஒரு வேளை
விழுந்துவிட்டால் 
நீ முழுதும்
உடைந்துவிட்டால்
மறுபடியும் எழு
ஒட்டிக்கொள்
வாய்ப்பு வரும்
வாழ்...

                ~ஜெய் கபி 





Comments

Post a Comment

Popular Posts