பேரதிர்ச்சி!


பேரதிர்ச்சி வரப்போவதறியாமல்
பேரின்பமாய் சிறுவயதோடு
பேருந்தில் வந்திறங்கினேன்

புதிதாய் ஒரு பேருந்து நிறுத்தம்; நிழற்குடை
அப்போதெல்லாம் ஆலமரம் தான்!
எங்கே அது?
ஒரு ஊருக்கே நிழல் தருமே!
என் தாத்தா பாட்டியின் 
முதல் சந்திப்பைப் பார்த்த மரம்...
ரொம்ப முதியது.
பல தலைமுறைக்கு 
நிழலிடமாகவும் நினைவிடமாகவும்
இருந்து சோர்ந்து ஓய்ந்து
படுத்துவிட்டது போல!

அனல் பறக்கும்
மணல் பாதை மாறி
சூரிய சோலையில் சாலை.

நான் குதித்து
விளையாடி குளித்த
எங்கூர் குளம் எங்கே?

கட்டடங்கள்
குளம் முழுக்க கட்டடங்கள்
கடைகள்
அதில் பாதி கடைகள்
ஒரு மீன் கடை வேறு...

நாங்கள்,
மீன்கள் எல்லாம்
நீந்தி வளர்ந்த குளம்
அதை அழித்து ஒழித்து
அது மேல் ஒரு கட்டடம்
அதிலொரு கடை- அதில்
கண்ணாடியில் கலர் மீன்கள்.

அய்யோ!
இதென்ன அடுத்த அதிர்ச்சி!
நான் சென்றபோதென்னை
தலையசைத்து வழியனுப்பிய தென்னை
இப்போது எங்கே?
அந்த தோப்பையே காணுமே...
யார் தொப்பையில் போய் சேர்ந்ததோ?

மன்னித்துவிடுங்கள் என்னை
மனவருத்தத்தோடு இங்கு
விடுமுறையை கழிக்க முடியாது
நான் கிளம்புகிறேன்...

இதென்ன 
இறுதியாய் ஒரு
பேரதிர்ச்சி!
அந்த பேருந்து நிறுத்த நிழற்குடையில்
"மழை வர
மரம் வளர்"
என்று எழுதி வைத்திருக்கிறார்கள்..!

                     ~ ஜெய் கபி 


Comments

Popular Posts