குட்டிக் கவிஞனின் கதறல்


என்
கவிதையைக் காட்ட
சென்ற இடங்களிலெல்லாம்
கவிதையைக் காணும் முன்னே
என் வயதைக் கேட்டார்கள்...

"இருபது" என்றேன்.

அதைக் கேட்டு
சிரித்துவிட்டு
அறிவுரை 
பொழிந்துவிட்டு
மென்மையாக தன்மையாக
அழகாக
அவமானப் படுத்திவிட்டு
அனுப்பி வைத்தார்கள்

என்
வயதைக் கேட்க
ஆர்வப்பட்டவர்கள்
அது தெரிந்ததும்
என்
கவிதையை 
அவர்களே
கணித்துவிட்டார்கள்

இருபது வயதென்றால்
நான்
இயற்றும் கவிதையில்
இருபது மட்டுமா தெரியும்?

ஆறும் அறுபதும்
என் இருபதிலும்
இருக்கும் என்பதை
என் பக்கத்தைப்
புரட்டினால் தானே
புரிந்து கொள்ள முடியும்!

இருபதென்பதால்
இளமை மட்டுமே
இருக்கும் என்பதா?

மழலையும் முதுமையும்
மனிதமும் புனிதமும்
தீதும் நன்றும்
நீரும் நெருப்பும்
இந்த இருபதும்
தொட்டும் கேட்டும்
இருக்கும் அல்லவா?

தமிழ் வளர்க்கும் தகுதி
கலை வளர்க்கும் உறுதி
எனக்கும் உண்டு!

என்னை
அவமானப்படுத்திய உங்களை
என்னால்
ஆச்சரியப்படுத்தவும் முடியும்

என்னை
ஏளனமாகப் பார்த்த
உங்கள் கண்கள்
என்
வெற்றிக் கூட்டத்தில்
என்னை
எட்டி எட்டித் தேடும்

என்னை
சிறு விண்மீனாய்ப்
பார்த்த உங்கள் முன்
பெரும் சூரியனாய்ப்
பிரகாசிப்பேன்!
அன்று 
கண்கள் மட்டுமல்ல
உள்ளமும்
கூசிப் போவீர்கள்.

             ~ ஜெய் கபி 

Comments

  1. அவர்கள் அவமானம் செய்ததால் தானோ என்னமோ... உன் வரிகள் அவர்கள் ஆச்சரியம் படும் வகையில் உள்ளது

    ReplyDelete

Post a Comment

Popular Posts