கவசமணிந்த காதலி!


உன்னை வர்ணிக்க காத்திருக்கிறேன்!
நீயோ அது தெரிந்தது போல்
முகக் கவசம் அணிந்து வருகிறாய்.

ஆனால்,
நான் ஓவியன் என்பதை
ஏனோ மறந்துவிட்டாய்.

உன் உதிர்ந்த 
ஒரு கூந்தல் போதும்
உன் அழகு மொத்தமும் 
உணர்ந்துவிடுவேன்!

எனக்கோ உன் 
கன்னங்கள், இதழ்கள் தவிர
அனைத்துமே காணக் கிடைத்தது.

காதோரம் ஆடும் ஜிமிக்கி
என்னை, உன்னை
வார்த்தையால் வரைய சொல்கிறது!

வரைகிறேன்...

புருவங்கள் இரண்டும்
பூவிழி கோயிலின் கோபுரங்கள்

உன் 
பூவிழி பேசும் மொழி தெரிந்தால்
அந்த கோயிலில்
அர்ச்சகனாக மாறிவிடுவேன்.
ஆயுள் முழுதும் 
தரிசனம் காண்பேன். 

உன் 
கண்ணிமையிலிருந்து உதிரும்
ஒரு முடி போதும்
அடியேனுக்கு.
ஆயுள் முழுதும்
பிரசாதமாய் காப்பேன்.

அப்படியே நடந்து விட்டாய்
நடந்து என்னை கடந்து விட்டாய்.

உன் 
கண்ணே கதை பேசுகிறதே!

கவசத்தினுள் ஒளிந்திருக்கும்
உன் இதழ் திறந்தால்
நீ இருமிய சத்தம் கூட
இசையாகிவிடும் எனக்கு.

பாதி பிறை பார்த்ததற்கே
பாதி பிறவி பற்றி எரியுதே...
முகக்கவசம் கழட்டி
முழு மதி முகம் 
பார்த்துவிட்டால் 
பிறவி பைத்தியம்
முற்றிவிடும் எனக்கு!

காத்திருப்பேன் 
உன் முகம் கான.
காலை வரை அல்ல
காலம் வரை!

                ~ ஜெய் கபி 










Comments

  1. It's really awesome man, you want's to be a good story writer in your carrier and we all eagerly wants to see in a big screen soon.......

    ReplyDelete
  2. Super Machan❤️❤️

    ReplyDelete

Post a Comment

Popular Posts