கடங்கார சேது...


சேது... நீ
சாதுவென் றெண்ணி
கேட்டவுடன் உனக்கு
நோட்டுகளைக் கொடுத்தேன்

"வட்டி பெருகும்முன் - ஆடு
குட்டி வளரும்முன் - வீடு
தட்டி தந்துவிடுகிறேன்"

என்று சொன்னது கேட்டு
சென்ற தென் குற்றம்

அந்த குட்டியின்
குட்டியே குட்டியீன்றது
உன் வட்டியின் 
வட்டியே வட்டியீன்றது!

இன்னும் நீ
தருவ தாயில்லை
தருகிறாய் தொல்லை...

கடைசியாய்
கேட்டபோது:
கோடை மழை
கோல மழிக்கையில்
தருகிறே னென்றாய்.

முடிந்த தென்று
நினைத்துக் கொண்டேன்.

உண்டான காலமே
உருப்படியாய் பெய்வதில்லை
இதில் கோடையிலா...

அப்படியும் எப்படியோ
கோடையிலும் வாடைக்காற்று
ஓடையிலும் ஒடுமளவிர்க்கு
மழை... எதிர்பாரா மழை!

அப்போதும்
தரமறுத்தாய்...
இப்போது 
என்ன சொல்லி
மறுதலிப்பாய்?

"தற்போதும்
தர இயலாது.
பண மில்லை

ஆகவே, இங்கு
எப்போது சாலைகள்
கூறுபோடப் படாமல்
குழிதோண்டப் படாமல்
இருக்கின்றனவோ
அப்போதே அக்கணமே
வட்டி அதன் குட்டி
வட்டியின் வட்டி
குட்டியின் வட்டி
கொட்டி விடுகிறேன்
மொத்தமாய்"

என்ன சேது
சோதிக்கிறாய்?

இதற்கு தரமுடியாது
என்றிருக்கலாம்...

சீரான சாலை!

அதற்குள் நான்
சீரழிந்து விடுவேனே!

பணம் கிடக்கிறது பணம்
விட்டால் இவன்
பிணமாக்கி விடுவான் போல!

                ~ ஜெய் கபி 

Comments

Popular Posts