மேகமோகம்


ஏனென்றே தெரியவில்லை...
இந்த
மேகங்கள் என்றாலே
மோகம் வந்து விடுகிறது
தேகம் சிலிர்த்து - கண்
தாகம் அடங்க மறுக்கிறது


சில சமயங்களில்
எனக்குப் பிடித்த
நிலவை என்னிடமிருந்து
ஒளித்து வைத்துக் கொள்கிறது

பாவம்...
அதற்கு ஒழுங்காக
ஒளித்து வைக்கக் கூட
தெரியவில்லை
ஒளியே காட்டி கொடுத்துவிடுகிறது

ஆனாலும், அந்நேரம்
நிலவை விடவும்
நான் ஏமாந்ததாய் 
நினைத்துச் சிரிக்கும் அந்த
முட்டாள் மேகங்கள் மீதே
என் மோகப்பார்வை வீழும்!

குழந்தையின் உடலிலிருக்கும்
அடுக்குகள் போல்
பேரக் குழந்தைகள்
பார்த்துவிட்டவர்களின் 
கன்னச் சுருக்கங்கள் போல்

மீன் போல்
மான் போல்
கடல் போல்
அலை போல்
மலை போல்

அடடா...!
எத்தனை வடிவம்..!
எத்தனை உருவம்..!

உன்னை உருவகேலி
செய்ய யாருக்கு
மனம் வரும்..
                 
கறுப்பாய்
வெள்ளையாய்
நீலமாய்
வண்ணங்கள் பல
கொண்டாலும்

நிறவெறியின்றி
பின்னிப் பிணைந்து
ஒட்டி உரசி
கூடி குலாவி
ஒற்றுமையாய் உலாவும்
உங்களிடமிருந்து தான் நான்
உத்வேகம் கொள்கிறேன்...

 
மேகம் மேலே
மோகம் கொள்வதில்
தனிப் பெருமிதம் எனக்கு.

        ~ ஜெய் கபி

Comments

Popular Posts